முத்தமிழ்க் காவலரின் எது வியாபாரம்? எவர் வியாபாரி? என்ற அரிய நூல் சிறந்த படைப்பாகும். வணிகர்களுக்கு மட்டுமன்றி வணிகவியல், நிர்வாகவியல் துறை மாணவர்களுக்கும், அது மட்டுமின்றித் தன் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும், ஏன், பல்லாண்டு காலமாக வணிகத்துறையில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கும் ஒர் அருமையான வழிகாட்டு நூலாகும்.கி. ஆ. பெ. அவர்கள் ஒரு தலைசிறந்த வணிகராகத் திகழ்ந்தார். வணிகத்துக்கும், வணிகனுக்கும் இலக்கணமாக விளங்கினார். இந்த உயரிய நிலையை எவ்வாறு எந்த ஒரு இக்கட்டான ஆதரவற்ற நிலையில் தனது 30வது வயதில், தந்தையை இழந்தபோது மனத்துணிவுடன், அயரா உழைப்புடன், நாணயத்துடனும், நேர்மையுடனும், தரமே பிரதானம் என்ற மாறாத கொள்கையுடனும், சிக்கனத்தை கைப்பிடித்து அடைந்தார் என்பது அனைவருக்கும் ஒரு பாடமாகும்.அவர் காட்டியுள்ள சேமிக்கும் வழியும், சேமித்த செல்வத்தைப் பாதுகாக்கும் முறையும், ஒவ்வொரு வணிகரும் வாழ்க்கையில வெற்றி பெற அவசியமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய பண்புகளாகும்.1922ஆம் ஆண்டில் அவர்கள் எழுதியுள்ள வணிகக் கடிதங்கள் இன்றைக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு அரும் பொக்கிஷங்களாகும். மீண்டும் மீண்டும் படிக்க ஆவலைத் தூண்டுகின்றன.உயர்ந்த சரக்கு! அதிக விலை!! என்ற அவருடைய உறுதியான வணிகக் கொள்கையோடு அவருடைய சிங்கப்பூர் வணிகம், பினாங்கு வணிகருக்குச் சரக்கு அனுப்ப மறுத்தவணிகமுறை, அவருக்கு வியாபார வெற்றியை தேடித்தந்தது என்பதோடு இந்த நிகழ்ச்சிகளை வாசிப்போருக்கு மிகுந்த ஆர்வத்தை அளிக்கிறது.“ஆம் உயர்ந்த சரக்கை அதிக விலை கொடுத்து வாங்கும் வியாபாரி தான் நான்; என் வியாபாரமும் புது வியாபாரம் தான்” என்று பெரிய கோம்பை பண்ணையாரிடம் கொள்முதல் நிகழ்ச்சி, பண்ணையாரிடம் அவர் கொண்ட மதிப்பு, பண்ணையாரின் மனைவி அடுத்த வியாபாரிக்குச் சரக்கைக் காட்ட மறுத்த நிகழ்ச்சி படிப்போரை புல்லரிக்கச் செய்து, முத்தமிழ்க் காவலரின் பெருமையை புரிய வைக்கிறது.வணிகத்துறையிலே சிறந்த தனிப்பெருந் தலைவராக உயர்ந்து காட்டிய அய்யா அவர்கள், வணிக சங்க இயக்கத்துக்கும் தமிழகத்தில் முன்னோடியாக விளங்கினார்கள் என்பது பலருக்குத் தெரியாது. தமிழ்நாடு வர்த்தகக் கழகத் தலைவராக அவர் ஆற்றிய பணிதான், இன்று தமிழகமெங்கும் உள்ள வணிகர்கள் ஆங்காங்கே பல்வேறு வணிக சங்கங்களை துவக்கி, பயன்பெற வழி வகுத்தது என்றால் மிகையாகாது. வணிகரான அவர், தம் சொந்த முயற்சினால் உழைப்பினால், வணிகத்தில் மட்டும் தலைசிறந்தவராக விளங்கவில்லை. அத்துடன் தமிழ் இலக்கியத்திலும் மாபெரும் அறிஞராய் உயர்ந்து, சித்த மருத்துவத்திலும் சிறந்த விற்பன்னராக விளங்குகிறார். அவருடைய அரிய, பெரிய சாதனை வணிக சமுதாயத்தினர் அனைவருக்கும் பெருமையளிப்பதாகும்.முத்தமிழ்க் காவலர் அவர்கள் இச்சிறந்த நூலை வெளியிட்டுள்ளமைக்கு, வணிகர் மட்டுமல்ல, இளைஞர் சமுதாயமும் அவருக்கு நன்றிக் கடன் செலுத்திட வேண்டும்.எஸ். வி. எஸ். சுந்தரமூர்த்தி